மௌன சாந்நித்யம், ஸ்ரீ கங்கா மா அவர்களுடன் சத்சங்கம் – பகுதி 1
₹150
Description
அருணாசலத்தின் சக்தியாலும், பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் பேரருளாலும், வாழ்நாள் முழுவதுமாக இருந்த ஆத்ம சாக்ஷாத்காரத்தின் தாகத்தாலும் ஸ்ரீ கங்கா மா திருவண்ணாமலை வந்தடைந்தார். அங்கு அந்தப் பேரருளிடம் அவருக்கு நிகழ்ந்த முழுமையான சரணாகதி, அவரை இடையறாது ஆத்மாவிலேயே நிலைபெறச் செய்தது. தற்போது, அங்கு நிகழும் சத்சங்கங்களின் வாயிலாக, அவரை நாடி வரும் அனைவரின் இதயத்திலும் அந்த மௌனத்தை உணரச் செய்யவும், அதிலேயே அவர்களை நிலைநிறுத்தவும் அவரது சாந்நித்யம் ஓர் அரிய வாய்ப்பை வழங்கி வருகிறது.
இந்நூல் 2022 ஜூலை முதல் 2024 ஜனவரி வரை அம்மாவுடன் நடந்த சத்சங்க உரையாடல்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது. மேலும், அம்மா தனது ஆன்மீகப் பயணம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் விரிவான அறிமுகப் பகுதியும் இதில் இடம்பெற்றுள்ளது.
இப்புத்தகத்தை வழக்கமான ஆன்மீகப் புத்தகக் கடைகளின் மூலமாகவோ அல்லது லாப நோக்கிலோ விற்பனை செய்யக் கூடாது என்று அம்மா கேட்டுக்கொண்டுள்ளார். புத்தகத்தின் அசல் விலையுடன், தபால் மற்றும் இதர கையாளுதல் கட்டணங்களை மட்டும் செலுத்தி வலைத்தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். திருவண்ணாமலையில் உள்ள அவரது சத்சங்கத்திலும் இது நேரடியாகக் கிடைக்கும்.
ஆகஸ்ட் 5, 2023
கேள்வி: நான் ஆத்ம விசாரணையின் மூலம் எனது இருப்பு நிலையுடன் ஒன்றியிருக்க முயற்சிக்கிறேன். 'நான் யார்?' என்று கேட்கும்போது, என் மனம் உள்நோக்கித் திரும்பி அந்த இருப்பு நிலையைத் தேடுகிறது. ஆனால், உடனே கவனம் சிதறி, மனம் தான் விரும்பும் புற விஷயங்களை நோக்கி வெளியே அலைபாய்கிறது. நான் செய்யும் இந்த முயற்சிகள், இருப்பு நிலையை நான் தற்காலிகமாகப் பார்க்கும் ஒரு காட்சிப் பொருளாகவே மாற்றிவிடுவதாக உணர்கிறேன். மனதின் இந்த வலையில் சிக்காமல், அந்த இருப்பு நிலையை நான் எப்படி அடைவது?
அம்மா: ஆத்ம விசாரணையின் முழுமையே 'நான்' என்ற எண்ணத்தின் மூலத்தை சென்றடைவதுதான். அது எது? அதுதான் சிந்திப்பவன்(thinker). விசாரணை என்பது, அந்தச் சிந்திப்பவனைக் கண்டறிந்து, மீண்டும் அவனிடமே திரும்புவது. எண்ணங்களைப் பற்றிக்கொள்வதற்குப் பதிலாக, இந்தச் சிந்திப்பவனைப் பற்றிக்கொள்வதே உண்மையான விசாரணை. இந்தச் சிந்திப்பவனால் உங்களுக்கு முன்னால் பல விஷயங்களை உருவாக்கி வித்தைகள் காட்ட முடியும்; அவனே விசாரிப்பவனாகவும் வேடம் போட முடியும். சிந்திப்பவன் யார்? செய்பவன் யார்?
'நான் இருக்கிறேன்' என்ற இருப்பையும், அதைப் ‘பார்க்கும் வேறொருவன்’ என்ற பார்வையையும் பிரிப்பதே இந்தச் சிந்திப்பவன்தான். இதுவே இங்குள்ள அடிப்படைப் பிரச்சனை. எனவே, இந்தச் சிந்திப்பவனை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள். அனைத்து எண்ணங்களுக்கும் மூலம் அதுவே. உங்களுக்குள் 'நான்' என்று மேலெழும் அந்தச் சக்தியே சிந்திப்பவன். அந்தச் சிந்திப்பவன் இல்லாமல், அடுத்தடுத்து வேறு எந்த எண்ணங்களும் எழ முடியாது. இந்த 'நான்' என்ற எண்ணம், உங்கள் கவனத்தைச் சிதறடித்துத் தப்பிக்கப் பல வழிகளில் முயற்சி செய்யலாம்; ஆனால், கவனம் சிதறாமல் அந்த 'நான்' என்ற எண்ணத்தை மட்டும் உறுதியாகப் பற்றிக்கொண்டால், அது தானாகவே காணாமல் போய்விடும்.
கேள்வி: என்னால் அந்தச் சிந்திப்பவனை ஒருபோதும் கண்டறிய முடிவதில்லை.
அம்மா: அப்படியென்றால் நீங்கள் உண்மையை கண்டறிந்து விட்டீர்கள்! [சிரிக்கிறார்] ஏன் தெரியுமா? ஏனெனில் 'சிந்திப்பவன்' என்று எவனுமே இல்லை. நீங்கள் அதைத் தேடிச் செல்லும்போது அது மறைந்துவிடுகிறது. அதற்குப் பதிலாக எண்ணங்களைப் பற்றிக் கொண்டால், அவை உங்களைப் பல திசைகளில் இழுத்துச் சென்றுவிடும். உங்களுக்கு முன்னால் பல காட்சிகளை உருவாக்கி, நீங்கள் அவற்றின் பின்னால் ஓடுமாறு செய்யும். ஆனால், இந்த எண்ணங்களை உருவாக்கி ரசித்துக் கொண்டிருக்கும் அந்த 'நான்' யார்? அதையே பற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் சொன்னது போலவே, எண்ணங்களை உருவாக்கும் அந்தச் சிந்திப்பவன் மறைவதை நீங்கள் காண்பீர்கள். அதற்குத் தனித்த இருப்பு இல்லை என்பதாலேயே அது மறைந்துவிடுகிறது.
[சிறிது இடைவெளிக்குப் பிறகு அம்மா தொடர்ந்தார்:]
இதுவே ஆத்ம விசாரணையின் அடிப்படை. இது ஆன்மாவைப் பற்றி விசாரிப்பது அல்ல. தூய்மையான ஆன்மாவிலிருந்து நம்மைப் பிரிப்பது எதுவென்றால், 'தனித்து ஒருவன் இருக்கிறான்' என்ற எண்ணம்தான். அதாவது, தனக்கென ஒரு சொந்த இருப்பு இருப்பது போலக் காட்டிக்கொள்ளும் ஒரு சிந்திப்பவன் இருப்பதாக நினைப்பது. அதுதான் 'நான்' என்ற தனித்த உணர்வாக வெளிப்பட்டு தன்னை அறிவித்துக் கொள்கிறது. மற்ற எல்லா எண்ணங்களும் இந்த 'நான்' என்ற எண்ணத்தின் எழுச்சியால்தான் தோன்றுகின்றன.
இந்த 'நான்' என்ற எண்ணம் எழும்போது, அதன் மூலத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். அந்தச் சிந்திப்பவன், பல வேலைகளைச் செய்தாலும், அதைத் தப்பித்துவிட அனுமதிக்காதீர்கள். 'பற்றிக் கொள்வது' என்றால் உண்மையில் நீங்கள் அதை ஊடுருவி, கடந்து செல்கிறீர்கள் என்று அர்த்தம். அப்போது அந்த 'நான்' என்ற எண்ணம் தானாகவே மறைந்துவிடும்.
இந்த 'நான்' என்ற எண்ணம் தோன்றியவுடன், அது மற்ற எல்லா எண்ணங்களையும் ஊக்குவித்து, அவற்றுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது. தன்னைத்தானே இரண்டாகப் பிரித்துக்கொண்டு, 'நான்' என்று ஒருவரையும், தேடுபவர் என்று இன்னொருவரையும் போலக் காட்டிக் கொள்கிறது. இதுதான் ஒட்டுமொத்தப் போராட்டமுமே. உங்களுக்குள் 'நான்' என்று எழும் அந்தச் சக்தியைப் பாருங்கள். அது தப்பித்துவிடாதபடி அதன் மூலத்தைப் பற்றிக் கொள்ளுங்கள்; அது அதன் பிறப்பிடத்திலேயே அழிந்துவிடும்.
அதன் மூலத்தைப் பற்றிக் கொள்ள முயலும் அந்த நொடியில், சிந்திப்பவன் தப்பிப்பதற்காகப் பல சாக்குகளை உருவாக்கலாம். ஆனால் விடாதீர்கள். 'பற்றிக் கொள்வது' என்றால் உறுதியாகப் பற்றிக் கொள்வதுதான்! [அம்மா விரல்களைச் சொடுக்கிக் காட்டுகிறார்]. அது உங்கள் கவனத்தை வேறு எங்காவது திருப்புவதற்குப் பல வழிகளில் முயற்சிக்கும். ஆனால் நீங்கள் அந்த 'நான்' என்பதோடு மட்டுமே நிலைத்திருங்கள்.
உங்களால் அதன் மூலத்திற்கு வர முடியாவிட்டால், இது வெறும் வெற்றுப் பயிற்சியாக மாறிவிடும். ‘நான் யார்? நான் யார்?’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு, 'நான் ஆத்மவிசாரணை செய்கிறேன்' என்று மனம் எண்ணத் தொடங்கிவிடும். இது நிகழும்போது, பயிற்சி செய்பவனும் அங்கிருப்பான், பயிற்சியும் அங்கிருக்கும் (இரண்டும் தனித்தனியாக இருக்கும்). ஆனால், உண்மையான ‘நான் யார்?’ என்ற விசாரம் நிகழும்போது, அங்கே உற்று நோக்குவதற்கோ அல்லது பயிற்சி செய்வதற்கோ இரண்டாவதாக ஒரு 'நான்' இருக்காது.
பயிற்சி செய்ய முயலும்போதுதான் மனதின் தந்திரம் நடக்கிறது. அது மீண்டும் மீண்டும் ‘என்னால் அதைக் கண்டறிய முடியவில்லை’ என்று சொல்லும். அதைத் தேடி கண்டறிய முயல்வது யார்? 'நான்' என்ற எண்ணத்தைப் பற்றி நீங்கள் 100% முழு விழிப்புணர்வுடன் இருக்கும் அந்தக் கணமே, அது மறைந்து விடுகிறது. அது மற்ற எண்ணங்களுக்குள் தப்பித்துவிடாதபடி, முழு விழிப்புணர்வுடன் இருங்கள்.
கேள்வி: நீங்கள் இதைச் சொல்வதைக் கேட்பதே ஒரு பெரிய நிம்மதியாக இருக்கிறது. சில நேரங்களில், 'நான்' என்ற எண்ணத்துடன் கூடிய எனது சிந்தனை, கட்டுப்பாட்டை மீறிப் போனது போலத் தோன்றுகிறது. நாய் ஒன்று தன் உடலை ஓயாமல் சொறிந்து கொண்டே இருப்பதைப் போல, தேவையற்ற எண்ணங்களை நான் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன். இதனால் எனக்கு எந்தப் பயனும் இல்லை என்று தெரிந்தும், என்னால் அதை நிறுத்தவே முடியவில்லையே!
அம்மா: ஆம், இது ஒரு மாபெரும் நிம்மதிதான். தொடர்ந்து எண்ணங்களைத் தோற்றுவித்து, நம்மை விஷயங்களைச் செய்யும்படி ஏமாற்றிக் கொண்டிருக்கும் இந்த மனதால் தான் அனைவரும் துன்பப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இது முடிவுக்கு வரும்போது கிடைக்கும் அந்த நிம்மதி அளப்பரியது.
[சிறிது இடைவெளிக்குப் பிறகு:]
ஆத்ம விசாரணையைச் சரியாகச் செய்வதற்கு, இந்த 'நான்' என்ற எண்ணத்தைக் கவனிப்பதில் நமக்கு மாபெரும் ஆர்வம் இருக்க வேண்டும். மேலும், அது ஒரு மகிழ்ச்சியான முயற்சியாக மாற வேண்டும். அந்த 'நான்' எழும்போதெல்லாம், அதை மிகுந்த ஆவலுடன் கவனியுங்கள். ஏனெனில், அதுவே உங்களுக்கு நிலையான பேரின்பத்திற்கான வழியைக் காட்டுகிறது. அதைச் சலிப்புறும் ஒரு சாதனையாக மாற்றிவிடாதீர்கள். அதை மகிழ்ச்சியான, அன்பான வழியில் செய்யுங்கள். அகந்தையின் போலித் தன்மையை ஒரு ஆச்சரிய உணர்வோடு ஆராய்ந்து பாருங்கள், சரிதானே? [சிரிக்கிறார்].
ஜனகர் 'நான் யார்' என்ற உண்மையை உணர்ந்தபோது, ‘ஆஹா! இந்த அகந்தை இத்தனை பிறவிகளாக என்னை ஏமாற்றிக் கொண்டிருந்ததே! நான் இதுதான் என்று என்னை நினைக்க வைத்து, அடையாளங்களோடு என்னைப் போராடவும் வைத்த அந்த நிஜமான திருடன் யார் என்பதை இப்போது நான் கண்டுகொண்டுவிட்டேன்!’ என்று ஆச்சரியப்பட்டார். [சிரிக்கிறார்]
அகந்தையில் சிக்கிக் கொள்வதால்தான் ‘நாம் யார்’ என்பதை மறக்கச் செய்யும் சூழல்கள் உருவாகின்றன. இந்த மறதிதான் ஒரே பிரச்சினை. ஆயினும், நாம் அதனை நினைவுறும்பொழுதெல்லாம், அது இறையருள் நமக்குள் செயல்படுவதற்கான அறிகுறியாகும். 'நான்' என்னும் உணர்வு முற்றிலும் அழியும் வரை, நமக்குள் முறையான ஆத்மவிசாரணை நிகழ வேண்டும் என்பதே உண்மையான பிரார்த்தனையாக இருக்க வேண்டும்.
அகந்தை என்பது நம் மகிழ்ச்சியைத் திருடும் ஒரு திருடன். அது எதிரிதான், ஆனால் நண்பனைப் போல நடித்து நம்மை ஏமாற்றுகிறது. அந்த அகந்தை உண்மையானது அல்ல என்பதைப் புரிந்து கொள்வதே ஆத்மவிசாரணை. ஞானம் சித்திக்கும் வரை அந்த விசாரணை தொடரட்டும், சரிதானே?
Related products
-

Silent Presence, Vol. 1 Satsang with Ganga Maa
₹150 Add to cart This product has multiple variants. The options may be chosen on the product page
